search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவ கிராமம்"

    குமரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதைத் தொடர்ந்து மீனவ கிராமங்களில் மாவட்ட பேரிடர் கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா ஆய்வு செய்தார்.
    நாகர்கோவில்:

    புயல் காரணமாக தமிழகத்துக்கு கொடுக்கப்பட்டு இருந்த “ரெட் அலர்ட்“ வாபஸ் பெறப்பட்ட போதிலும் குமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. ஏற்கனவே குமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரும் சேதம் ஏற்பட்டது. எனவே தற்போது மீண்டும் கனமழை பெய்தால் அதை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.

    மேலும் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அனைவரும் கரை திரும்புவதற்காகவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குமரி மாவட்டத்தில் இருந்து 646 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அதில் பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பிவிட்டனர். எனினும் நேற்று முன்தினம் நிலவரப்படி 80 படகுகள் மட்டும் கரை திரும்ப வேண்டி இருந்தது. ஆனால் நேற்று காலை அந்த எண்ணிக்கை 64 ஆக குறைந்துள்ளது.

    இந்த நிலையில் குமரி மாவட்டத்திற்கு பேரிடர் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ள ஜோதி நிர்மலா நேற்று முன்தினம் மாலை குமரி மாவட்டம் வந்தார். பின்னர் நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது குமரி மாவட்டத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இதனைத் தொடர்ந்து நேற்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை அவசர கால செயல் மையத்தை பார்வையிட்டார். பின்னர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா மீனவ கிராமங்களுக்கு நேரில் சென்று முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வு பணி தூத்தூர், குளச்சல் உள்ளிட்ட இடங்களில் நடந்தது.

    அதாவது மீனவ கிராமங்களில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சென்று அங்கு நடைபெறும் பணிகளை அவர் பார்வையிட்டார். புயல் எச்சரிக்கை குறித்த தகவல் கிடைக்காத மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பணிகள், மீனவர்கள் கரை திரும்பும் விவரங்களை சேகரிக்கும் பணிகள், வானிலை நிலவரம் பற்றி மீனவர்களிடம் தெரிவிக்கும் பணிகள் அங்கு நடைபெறுகிறது. அந்த பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா ஆய்வு செய்தார். மேலும் 2 படகுகளை அவரே தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து கரை திரும்பும்படி கூறினார்.

    மேலும் கரை திரும்பாத மீனவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மழை காலத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக செய்துள்ள ஏற்பாடுகள் பற்றியும் கேட்டறிந்தார். பின்னர் தூத்தூரில் மீனவ பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மீனவ மக்களுக்கு தகவல்கள் துரிதமாக தெரிவிப்பதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என்று மீனவ பிரதிநிதிகளிடம், அவர் கூறினார். மேலும் குளச்சலில் விசைப்படகு தளத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற பெரும்பாலான படகுகள் கரை திரும்பிவிட்டன. இன்னும் 64 படகுகள் மட்டுமே கரை திரும்ப வேண்டி உள்ளது என்று கருதுகிறோம். அவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பணிகள் நடக்கிறது. கடலில் இருக்கும் மீனவர்களின் நிலையை ஆய்வு செய்வதற்காக கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு நடைபெறும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. கடலுக்கு சென்ற அனைத்து மீனவர்களும் பத்திரமாக கரை திரும்பும் வரை இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

    மீனவர்களுக்கு நவீன தொலைத்தொடர்பு கருவி வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் அவை வந்து சேர்ந்துவிடும். மேலும் எந்த விதமான தொடர்பு சாதனங்களை மீனவர்கள் கேட்டாலும் அதை வழங்க அரசு தயாராக உள்ளது. குமரி மாவட்டத்துக்கு பேரிடர் மீட்பு குழு ஏற்கனவே வந்துள்ளது. ஆனால் அவர்களுக்கான பணி இன்னும் வரவில்லை. ஆனால் எந்த விதமான பேரிடரையும் எதிர்கொள்ள அவர்கள் தயாராக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது கலெக்டர் பிரசாந்த் வடநேரே, கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், வருவாய் அதிகாரி ரேவதி, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதிக் தயாள், கூடுதல் இயக்குனர் (சிறப்பு அலுவலர், ராமநாதபுரம்) ஜாணிடாம் வர்க்கீஸ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சையத் சுலைமான் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 
    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு முன் மீனவ கிராமங்களை தனி கிராம பஞ்சாயத்துகளாக அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் மீனவர் நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் 608 மீனவ கிராமங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 9.24 லட்சம் மீனவர்கள் உள்ளனர். மீனவர்களின் நலன் கருதி மண்டல கமிஷன் பல பரிந்துரைகளை செய்துள்ளன. அதில், மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள பஞ்சாயத்தை, தனி பஞ்சாயத்துகளாக அறிவிக்கவேண்டும் என்று கூறியுள்ளது.

    ஆனால், பஞ்சாயத்து வார்டு வரையறை கமிஷன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கன்னியாகுமரி மாவட்டத்தில், நெய்தல் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு 1980-ம் ஆண்டு முதல், அனைத்து மீனவர் கிராமங்களை உள்ளடங்கிய தனி கிராம பஞ்சாயத்து வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

    வார்டு வரையறை கமிஷன் தொடர்ந்து அந்த கோரிக்கையை நிராகரித்துக்கொண்டே வருகிறது.

    திருநெல்வேலி மாவட்டத்தில், கூட்டாம்புளி கிராமத்தில் 6 ஆயிரம் மீனவர்கள் உள்ளனர். இந்த ஊரை லெவஞ்சிபுரம் பஞ்சாயத்தோடு இணைத்துவிட்டனர். இதனால் மீனவ கிராம மக்களுக்கு ஜனநாயக ரீதியாக உள்ள உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

    ஏற்கனவே, கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

    அதேநேரம், அவர்களது சொந்த கிராமத்தை நிர்வகிக்கும் அதிகாரங்களும் அவர்களுக்கு வழங்காதது, மனித உரிமை மீறலாகும். எனவே, தமிழக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு தமிழகத்தில் உள்ள மீனவ கிராமங்களை தனி பஞ்சாயத்தாக வரையறை செய்து அறிவிக்கும்படி தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் செயலாளர், இயக்குனர், வார்டு வரையறை கமிஷனின் தலைவர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர், பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணையை ஆகஸ்டு 17-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். #tamilnews
    ×